கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்

 • user warning: Table './drupal/cache' is marked as crashed and should be repaired query: SELECT data, created, headers, expire, serialized FROM cache WHERE cid = 'schema' in /Library/WebServer/Documents/drupal/includes/cache.inc on line 27.

 • user warning: Table './drupal/cache' is marked as crashed and should be repaired query: SELECT data, created, headers, expire, serialized FROM cache WHERE cid = 'theme_registry:about' in /Library/WebServer/Documents/drupal/includes/cache.inc on line 27.


admin - Posted on 14 August 2011

முத்து நெடுமாறன்

12-8-2011 முதல் 14-8-2011 வரை மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள்' பன்னாட்டு மாநாட்டில் படைக்கப்பட்டக் கட்டுரை.

 

மின்னூல் வடிவம்:  download eBook

 

முன்னுரை

மின்னணு புத்தகங்கள் அல்லது மின்னூல்கள் இன்றைய தொழிநுட்ப உலகில் மிகவும் புகழ் பெற்று வருகின்றன. தாளில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகங்கள் பல மின்னூல்களாக மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக பதிப்பிக்கப்படும் புத்தகங்கள் சில மின்னூல்களாக மட்டுமே வெளியீடு காண்கின்றன.

மின்னூல்களாகப் பதிப்பிப்பதன் வழி உயர்ந்த தரமான நூல்களை குறந்த விலையிலும் குறுகிய காலத்திலும் அனைத்துலக நிலையில் வெளியிடலாம்.

எழுத்து (வெற்று உரை - text) மற்றும் படங்கள் (pictures) இவற்றோடு அச்சு வடிவ புத்தகங்கள் அமைந்து விடுகின்றன. ஆனான் மின்னூல்கள் நகர்படம் (video), அனிமேஷன் (animation), ஒலி (audio) முதலிய பல்லூடகங்களையும் கொண்டிருக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கின்றது.

இதுபோன்ற வசதிகள் மின்னூலின் ஈர்ப்புத் தன்மையைக் கூட்டுவதன் வழி மாணவர்கள் நூலின் மேல் வைத்துள்ள ஈடுபாட்டையும் கூட்டுகிறது.

மின்னூல்களின் பல்வேறு அமைப்புகளைப் பற்றியும் கையடக்கக் கருவிகளில் அவற்றின் தோற்றங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

 

மின்னூல் அமைப்புகள்

கட்டற்றக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா ‘மின்னூல்’ என்பதை இவ்வாறு விளக்குகிறது1:

மின்னூல் என்பது நூல் ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பாகும். மின்னூலானது பொதுவாக பதிப்பாளர்களால், மின்னணுவியல், எண்முறை ஊடகங்கள் மூலம் தமது புத்தகங்களை விநியோகிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. இவை வெற்று உரை வடிவமாகவோ, நூல் சம்பந்தப்பட்ட சிறப்பு தகவல்களை தம்மகத்தே கொண்டவையாகவோ இருக்கும்.

மின்னுல்கள் பல்வேறு அமைப்பில் வெளியிடப்படுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றைக் காண்போம்.

 1. பி.டி.எஃப். (PDF) அமைப்பு.
 2. இணையத்தில் வெளியிடப்படும் (HTML) அமைப்பு.
 3. புதிய அனைத்துலகத் தாரமான இ-பப் (ePub) அமைப்பு.

இம்மூன்று அமைப்புகளும் கணினி, இணையம் மற்றும் கையடக்கக் கருவிகள் ஆகிய மூன்று தளங்களிலும் இயக்கப்படக் கூடிய அமைப்புகள். பி.டி.எஃப் அமைப்பில் உள்ள மின்னூலை வாசிப்பதற்கு ‘பி.டி.எஃப் ரீடர்’ (PDF Reader) எனும் வகையிலான வாசிப்புச் செயலிகள் (software) தேவை. இணைய அமைப்பிலான மின்னூலை வாசிப்பதற்கு உலாவி (browser) ஒன்றே போதுமானது. இ-பப் அமைப்பிலான மின்னூலை வாசிப்பதற்கு இ-பப் ரீடர் (ePub Reader) எனும் வாசிப்புச் செயலி தேவை.

இந்த மூன்று அமைப்புகளும் மின்னூலாகக் கருதப்பட்டாலும் அவற்றுக்கிடையே பல வேறுபாடுகள் உள்ளன. நூல் வடிவமைக்கப்பட்ட முறை, வாசிக்கப் பயன்படுத்தப்படும் கருவி, வாசிக்கும் போது ஏற்படும் அனுபவம் - இவை முக்கிய வேறுபாடுகளாக விளங்குகின்றன. இந்த வேறுபாடுகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.

 

பி.டி.எஃப் அமைப்பு

தாளில் அச்சிட்டு வெளியிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நூலை அச்சுக்கருவியில் அச்சிடுவதற்கு பதிலாக மின் வடிவில் சேமிப்பதே பி.டி.எஃப் அமைப்பு. ஊடகத்தில் மாற்றம் உண்டே தவிர நூல் விடிவமைப்பில் மாற்றம் ஏதும் இல்லை. அட்டைப்படம், உள்ளடக்கம், பக்க எண்கள், பின்னூட்டம் முதலிய நூற்கூறுகள் அனைத்தும் அச்சு வடிவ நூலில் எவ்வாறு பதிக்கப்படுகின்றனவோ அவ்வாறே பி.டி.எஃப் நூலிலும் பதிக்கப்படுகின்றன. விரலைக்கொண்டு தாளில் அச்சிடப்பட்டப் பக்கங்களைப் புரட்டுவதற்கு பதிலாக சுட்டியைக்கொண்டு திரையில் பக்கங்களைப் புரட்டுகின்றொம். அவ்வளவுதான்.

பி.டி.எஃப் வாசிப்புக் கருவியில் தோன்றும் பக்கத்தை பெரிதாகவோ சிறிதாகவோ காணலாம் ஆனால் பக்கத்தின் அமைப்பு அவ்வாறே இருக்கும். எழுத்துகளைப் பெரிதாக்கலாம் அல்லது சிறிதாக்கலாம். அதற்கேற்றாற்போல் படங்களின் அளவும் பக்கத்தின் அளவும் மாற்றப்படும். ஆனால் பக்கத்தின் தோற்றம் மாறாது. ஒரு பக்கத்தில் 10 வரிகளும் இரு படங்களும் இருந்தால், எத்தனை அளவு மற்றம் செய்தாலும் அதே எண்ணிக்கையிலான வரிகளும் படங்களும் மட்டுமே அந்தப் பக்கத்தில் தோன்றும். அடுத்தப்பக்கத்தில் உள்ள வரிகள் இந்தப் பக்காத்தில் வராது. அதுபோல இந்தப்பக்கத்தில் உள்ள வரிகள் அடுத்தப்பக்கத்திற்குப் போகாது.

பி.டி.எஃப் மின்னூல்களை உருவாக்குவது மிகவும் எளிது. அச்சிடுவதற்கான நூலை வடிவமைக்கும் அதே செயலில் இருந்து பி.டி.எஃப் மின்னூல்களைச் சேமிக்கலாம். மைக்ரோ சவ்ட் வெர்டு, அடோபி இன்-டிசைன் முதலிய செயலிகள் பொருத்தமானவை. கோப்புகளை பி.டி.எஃப்-ஆக சேமிப்பதற்கு பி.டி.எஃப் ரைட்டர் (PDF Writer) என்னும் செயலி தேவை. இவை இலவசமாகவே கிடைக்கின்றன2. பேஜ் மேக்கர் செயலியைத் தவிர்ப்பதே சிறந்தது. இந்தப் பழைய செயலியில் யூனிகோடு தமிழ் எழுத்துருகளைக் கொண்டு பக்கங்களை அமைக்க இயலாது. எனவே வருங்காலத்தில் பேஜ் மேக்கரில் உருவாக்கப்பட்ட தமிழ் மின்னூல்களில் பல சிக்கல்கள் எழலாம்.

பி.டி.எஃப் அமைப்பில் சேமிக்கப்பட்ட மின்னூலில் ஒருசில வசதிகளை மட்டுமே சேர்க்கலாம். அடோபி அக்ரோபட் போன்ற செயலிகளைக் கொண்டு உள்ளடக்கப் பக்கத்தில் உள்ள தலைப்புகளை நூலில் உள்ள பக்கங்களோடு இணைக்கலாம்.

இதுபோன்ற சிற்சிறு முன்றேற்றங்களைத் தவிர பி.டி.எஃப் மின்னூல்களில் வேறு எந்த புதுமையையும் செய்ய முடியாது.

 

இணைய அமைப்பு

இணைய அமைப்பில் உருவாக்கப்படும் மின்னூல் மீயுரை குறியீட்டு மொழியில் (HTML) வடிவமைக்கப்பட்ட நூலாகும். ஒரு இணைய தள உருவாக்கத்திற்குப் பயன்படும் அதே தொழில்நுட்பங்களைக் கொண்டே இந்த வகை மின்னூல்களும் உருவாக்கப் படுகின்றன. இணையத்தில் தமிழ் மின்னூல்களைப் பதிவேற்றும் திட்டங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. மதுரைத்திட்டம்3, ‘நூலகம்’ திட்டம்4, சென்னை நூலகம்5 முதலியவை நூற்றுக்கணக்கான தமிழ் நூல்களை இணையத்தில் பதிப்பித்து வருகின்றன. கட்டற்றக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவையும் ஒரு பெரிய மின்னூல் களஞ்சியமாகக் கருதலாம்.

இணையத் தொழில்நுட்பம் என்பதால், எந்தவிதக் கணினிகளிலும் இந்த மின்னூல்களை வாசிக்கலாம். யூனிகோடு தரத்திலான தமிழ் எழுத்துரும் (font) உலாவியும் (browser) இருந்தாலே போதும். விண்டோஸ், மெக்கிண்டாஷ் மற்றும் லினக்ஸ் கணினிகளில் இந்த இரண்டும் உள்ளன. எனவே தமிழ் மின்னூல்களைப் படிக்கும் வாய்பு இந்தக் கணினிகளில் இயல்பாகவே உள்ளது.

சி.எஸ்.எஸ். (CSS) மற்றும் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) ஆகிய கணினிமொழிகளின் துணைக்கொண்டு நூலோடு வாசகர்கள் ஊடாடுவதற்கான வசதிகளைச் சேர்க்கலாம். தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் புரட்டுவதைப் போன்ற உணர்வு, படங்களையும் எழுத்து வரிகளையும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்துதல், அருஞ்சொற்களைத் தேர்வு செய்து அவற்றிற்கான பொருளை இன்னோரு கட்டத்தில் காணுதல், குறிப்பிட்ட சொற்கள் வரும் பக்கங்களைத் தேடுதல் முதலிய பல வசதிகளை இணைய அமைப்பிலான மின்னூல்களில் சேர்க்கலாம்.

அதோடு மட்டும் அல்லாமல், இணைய பக்கங்களில் உள்ளது போல, நகர்படங்கள் (video), ஒலி பதிவுகள் (audio) முதலியவற்றக்கூட நூலில் சேர்க்கலாம்.

இணைய அமைப்பிலான மின்னூல்களில் பல புதுமைகளைச் செய்வதற்கன வாய்பு இருந்தாலும் சில குறைகள் உள்ளன. பி.டி.எஃப் நூலில் எல்லா பக்கங்களும் ஒரே கோப்பில் அடங்குவதுபோல் இணைய அமைப்பிலான நூலில் உள்ள பக்கங்கள் அடங்குவதில்லை. மேலும், இந்த நூலில் பயன்படுத்தப்படும் படங்கள் தனித்தனியே வெவேறு கோப்புகளில் சேமிக்கப்படுகின்றன. அதே போல நகர்படங்கள் ஒலிபதிவுகள் அனைத்தும் தனித்தனி கோப்புகளில் சேமிக்கப்பட வேண்டும். இணைய தொடர்பு இல்லாத போது இந்த நூலை வாசிப்பதாக இருந்தால் இந்த நூலுக்குத் தேவைப்படும் அனைத்துக் கோப்புகளும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.

இதுபோன்ற குறைகளைத் தீர்ப்பதற்காகவும் மின்னூலுக்கென்றே சில சிறப்பு அம்சங்களைச் சேர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் இ-பப் (ePub) எனும் புதிய மின்னூல் தரம்.

 

இ-பப் அமைப்பு

இ-பப் என்பது நவீன மின்னூல்களை வெளியிடுவதற்காக IDPF எனப்படும் அனைத்துலக மின்பதிப்புக் குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஓர் இலவச, கட்டற்ற, திறந்தவெளி மின்தரம்6.

இணைய அமைப்பில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி மின்னூலுக்கென்றே சில புதிய வசதிகளைச் சேர்த்து ஒரே கோப்பில் பதிக்கும் வாய்ப்பை இந்த இ-பப் தரம் வழங்குகிறது. மின்னூல்களை கணினிகளில் மட்டும் இன்றி கையடக்கக் கருவிகளிலும் வாசிகும் வாய்ப்பை இ-பப் ஏற்படுத்தியுள்ளது. மின்னூல்களை வாசிப்பதற்காகவே சில கருவிகள் சிறப்பாகத் தயரிக்கப்பட்டுள்ளன. அமேசன் டாட் காம்-இன் ‘கிண்டல்’ (Kindle), பார்ன்ஸ் & நோபல் நிருவனத்தின் நூக் (Nook), சோனி நிருவனத்தின் ‘சோனி ரீடர்’ (Sony Reader) முதலியவை பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னூல் வாசிப்புக் கருவிகள். ஆப்பிள் நிருவனம் (Apple Inc), 2010ஆம் ஆண்டு வெளியிட்ட ஐ-பேட் (iPad) கருவி ஒரு கையடக்கக் கருவி மட்டும் அல்லாமல் ஒரு கையடக்கக் கணினியாகவும் அமைந்துள்ளது. இதில் இ-பப் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட மின்னூல்களை அச்சிடப்பட்ட நூலை வாசிப்பதுபோலவே வாசிக்கலாம்7. ஒரு பக்கத்தைத் திருப்பும்போது ஏற்படும் அதே அனுபவத்தை இந்தக் கருவியிலும் காணலாம்.

Kindle Nook Color iPad

படம் 1: கையடக்கக் கருவிகள்: ‘கிண்டல்’ (kindle), நூக் கலர் மற்றும் ஐ-பேட்.

இ-பப் அமைப்பில் சேக்கப்பட்ட வசதிகளுள் மூன்றைச் சிறப்பாகக் கூறலாம். அவை: எழுத்துரு மாற்றத்தோடு வரிகளின் மறுவோட்டம், நூலைப் பற்றிய விவரம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட நோக்குநிலைகள் (orientation).

அ. எழுத்துரு மாற்றம் - வரிகளின் மறுவோட்டம்.

தாளில் அச்சிடப்பட்ட நூலில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவையோ அதன் அளவையோ மாற்றுவது இயலாது. ஆனால் மின்னூலில் இவ்விரண்டையும் மாற்றலாம். உருவோ அளவோ மாறும்பொது வரிகளின் அளவும் மாறுகின்றன. எனவே பக்கத்தின் ஓட்டமும் மாறுகினறது. அளவு பெரிதாகும்போது பக்கத்தின் எண்ணிக்கைக் கூடுகிறது, சிறிதாகும்போது எண்னிக்கைக் குறைகிறது. இவை அனைத்தையும் இ-பப் அமைப்பு சரிவர சமாளிக்கும்.

ஆ. நூலைப் பற்றிய விவரம்

மின்னூல்கள் பரவலாக இபோது விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நூல்களை விற்கும் மின் கடைகளில் நூலைப்பற்றிய விவரங்கள் பதிப்பிக்கப்பட வேண்டும். நூலாசிரியரின் பெயர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பு எண், பதிப்பிக்கப்பட்ட நாள் போன்ற விவரங்கள் மிக முக்கியமானவை. இந்த விவரங்களை நூலிலேயே சேர்த்து தேவைப்படும் போது முழு நூலையும் திறக்காமல் இந்த விவரங்களை மட்டும் வாசிப்பதற்கான வாய்ப்பை இ-பப் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஈ. ஒன்றுக்கும் மேற்பட்ட நோக்குநிலைகள்

ஐ-பேட் போன்ற கருவிகளை செங்குத்தாகவோ படர்க்கையாகவோ நோக்கி நூல்களைப் படிக்கலாம். நோக்குநிலைக்கு ஏற்றாற்ப்போல் நூலும் மாற்றியமைக்கப்படும். இந்த வசதியை மின்னூலில் ஏற்படுத்த இ-பப் அமைப்பு வழிவகுக்கிறது. இருவேறு நோக்குநிலைகளில் வழங்கப்படும் ஒரு நூலை கீழே உள்ள படத்தில் காணலாம்.


eBook Landscape

 

eBook Portrait

 

படம் 2: இருவேறு நோக்குநிலைகளில் ஒரு தமிழ் மின்னூல்

 

படர்க்கை நிலையில் ஒரே காட்சியில் 11 பக்கங்கள் உள்ளதையும் செங்குத்து நிலையில் அதே நூலில் 21 பக்கங்கள் உள்ளதையும் மேலே உள்ள படங்கள் காட்டுகின்றன.

எழுத்துருவின் அளவு மாற்றப்படும்பொது இந்த எண்ணிக்கை மேலும் மாறலாம்.

 

தமிழில் மின்னூல்

மேற்குறிப்பிடப்பட்ட எல்லா அமைப்புகளிலும் தமிழ் மின்னூல்களைத் தயாரிக்கலாம். விண்டோஸ், மெக்கிண்டஷ் மற்றும் லினக்ஸ் கணினிகளில் தமிழ் யுனிகோடு எழுத்துருகள் இயல்பாக இருப்பதால், அனைத்து கணினிகளிலும் இந்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லா கணினிகளிலும் அதே எழுத்துரு அமைந்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. எனினும், நூலை படிக்கும் வாய்ப்பு மட்டும் கண்டிப்பாக இருக்கும். பி.டி.எஃப் நூல்களில் எழுத்துரு கோப்போடு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே நூலில் உள்ள பக்கங்கள் அமைக்கப்பட்ட எழுத்துருவிலேயே தோன்றும்.

கையடக்கக் கருவிகளைப் பொருத்த மட்டில், ஐ-பேட் கருவி ஒன்றில் மட்டுமே இப்போதைக்கு தமிழ் எழுத்துரு சேர்க்கப்பட்டுள்ளது. முரசு அஞ்சல் 10இல் உள்ள இணைமதி எனும் எழுத்தின் மறுபதிப்பே ஐ-பேட்-இல் உள்ள தமிழ் எழுத்துரு என்பது குறிப்பிடத் தக்கது. ஐ-பேட்-ஐத் தவிர ஐ-போன் வகை கைத்தொலைப்பேசியிலும் இந்த எழுத்துரு சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கருவியிலும் தமிழ் மின்னூல்களை வாசிக்கலாம்.

ஐ-பேட்-இல் இ-பப் மின்னூல்களை வாசிப்பதற்கு ஐ-பூக் (iBook) எனும் செயலி உள்ளது. இந்தச் செயலியின் வழி வாசிக்கப்படும் நூல்களில் ‘ரீட் எலாவுட்’ (read aloud) எனும் வசதி உள்ளது. மின்னூலில் உள்ள வரிகளை ஒலிப்பதிவு செய்து நூலோடு சேர்க்கலாம். நூலைத் திறந்து ஐ-பூக் செயலியை அதில் உள்ள வரிகளை வாசிக்கச் சொல்லலாம். தமிழ் உச்சரிப்பை சரிவரக் கற்பிப்பதற்கு இந்த வசதி பேருதவியாக இருக்கும்.

மின்னூல் உருவாக்கம் ஒரு கூட்டுப்பணியாகவே அமையவேண்டும். நூலாசிரியர்கள், பக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டாலே அன்றி, தரம் வாய்ந்த மின்னூல்களை உருவாக்குவது கடிணம். உலகத் தரம் வாய்ந்த நூல்கள் தமிழிலும் உருவாக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. அதனை நன்கு பயன்படுத்தி சிறந்த தமிழ் மின்னூல்களை சேர்ந்தே உருவாக்குவோம்!

முற்றும்.

குறிப்புகள்:

 1. http://ta.wikipedia.org/wiki/மின்னூல்
 2. முரசு அஞ்சல் 10இல் பி.டி.எஃப் ரைட்டர் சேர்கப்பட்டுள்ளது.
 3. மதுரைத் திட்டம்: http://www.projectmadurai.org
 4. நூலகம் திட்டம்: http://www.noolaham.net
 5. சென்னை நூலாக்ம்: http://www.chennailibrary.com
 6. http://en.wikipedia.org/wiki/EPUB
 7. ஐ-பேட் கருவியில் இ-பப், பி.டி.எஃப் மற்றும் இணைய அமைப்பக் கொண்ட அனைத்து மின்னூல்களையும் வாசிக்கலாம்.

Murasu Anjal 10.0

முரசு அஞ்சல் 10

விவரம் உள்ளே!

Sellinam 4.0

Sellinam Logo

Compose Tamil text with suggestions, auto-corrections and next-word predictions on all your favourite mobile apps. http://sellinam.com